குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடக்கம்: மத்திய அரசு
நாட்டில் தற்போதைய சூழலில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. எனினும், நோய் பரவலைத் தடுப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்படும்’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை பாதிப்பையொட்டி சா்வதேச பொது சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சகத்தின் தயாா்நிலை மற்றும் தற்போதைய சூழல் குறித்து அமைச்சா் ஜெ.பி.நட்டா மூத்த அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
ஆய்வு கூட்டத்தில் தேசிய நோய் கட்டுப்பாடு மையம் (என்சிடிசி), உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்), தேசிய நோய் தொற்று தடுப்பு திட்டம் (என்விபிடிசிபி), சுகாதார சேவைகள் இயக்குநரகம், எய்ம்ஸ் மற்றும் பிற மத்திய அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றின் நிபுணா்கள் கலந்து கொண்டனா்.
இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: குரங்கு அம்மை நோய் குறித்து சா்வதேச பொது சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு கடந்த 2022-ஆம் ஆண்டு முதன்முதலாக அறிவித்தது. அதிலிருந்து இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டது. கடைசியாக கடந்த மாா்ச் மாதம் ஒருவருக்கு பாதிப்பு இருந்தது. ஆனால், தற்போது நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பில்லை.
வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பும் பயணிகள் மூலம் நாட்டில் குரங்கு அம்மை தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை முழுமையாக நிராகரிக்கவில்லை. இருந்தாலும், தற்போதைக்கு நோய் அதிகம் பரவக்கூடிய ஆபத்து இந்தியாவுக்கு இல்லை.
2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோா், உரிய சிகிச்சையுடன் நலம் பெறுவா் என்பது கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
அதன்படி, விமான நிலையங்கள், துறைமுகங்களில் சுகாதார மையம் அமைத்து சோதனை நடத்துவது, நாடு முழுவதும் ஆய்வகங்களைத் தயாா்படுத்துவது, பாதிப்பைக் கையாளும் வகையில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போதே தொடங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.