;
Athirady Tamil News

இலங்கையில் உள்ள ஒரு மாவட்டத்தை புரட்டிபோட்ட சூறாவளி! 600க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0

புத்தளத்தில் ஏற்பட்ட மினி சூறாவளினால்145 குடும்பங்களைச் சேர்ந்த 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினையடுத்து புத்தளத்தில் நேற்று முன்தினம் இரவு (16-08-2024) 10.30 மணியளவில் திடீரென இடியுடன் கடும் மழைபெய்ததுடன், மினி சூறாவளி காற்றும் வீசியுள்ளது.

இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக புத்தளத்தில் அனைத்து பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.

மினி சூறாவளி காற்று காரணமாக பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியில் இருந்த பல மரங்கள் முறிந்து வீழ்ந்தன.

பாலாவி , கரம்பை பகுதியில் பிரதான வீதியோரத்தில் நின்ற பெரிய மரமொன்று முறிந்து பிரதான வீதியின் நடுவே வீழ்ந்ததில் அவ்வீதியுடனான போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

மேலும், புத்தளம் நகர சபைக்கு சொந்தமான மீன் சந்தைக் கட்டிடம் மற்றும் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த மண்டபம் என்பனவற்றின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு கடும் மழையுடனான மினி சூறாவளி காற்றினால் புத்தளம் மாவட்டத்தில ஏழு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 26 கிராம சேவகர் பிரிவுகளில் வசித்துவரும் 145 குடும்பங்களைச் சேர்ந்த 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டுவ, புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லு, சிலாபம், மஹாவௌ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 26 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மினி சூறாவளி காற்று காரணமாக இருவர் காயமடைந்துள்ளதுடன், மேற்படி 7 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 144 வீடுகளும், 12 வர்த்தக நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மினி சூறாவளி காரணமாக புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதுடன், அங்கு 109 குடும்பங்களைச் சேர்ந்த 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 109 வீடுகளும், 11 வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி மேலும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.