ஒரே வாரத்தில் 1,200 பேர்கள் பாதிப்பு… mpox தொற்றால் திணறும் ஒரு நாட்டின் மக்கள்
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை mpox தொற்றால் 18,737 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்காவில் இருந்து நடுங்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே வாரத்தில் 1,200 பேர்கள்
ஆப்பிரிக்க ஒன்றிய சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஒரே வாரத்தில் மட்டும் 1,200 பேர்கள் mpox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை என்பது mpox தொற்றின் அனைத்து வகைக்குமானது என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ள mpox Clade 1b வகை உட்பட எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுவரை ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 12 நாடுகளில் 3,101 பேர்களுக்கு mpox பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 15,636 பேர்கள் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், சிகிச்சை பலனின்றி 541 பேர்கள் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு காங்கோ ஜனநாயக குடியரசு என கூறப்படுகிறது. இங்கு தான் mpox தொற்றின் மிக ஆபத்தான Clade 1b வகை முதல் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, ஒரே வாரத்தில் 1,005 பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுடன், அதில் 24 பேர்கள் மரணமடைந்தனர். மட்டுமின்றி, காங்கோ குடியரசின் 26 பிராந்தியங்களிலும் mpox பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் mpox பாதிப்பு
அண்டை நாடான புருண்டியில் 173 பேர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, ஒரே வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 75 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் mpox பாதிப்பு ஸ்வீடன் மற்றும் பாகிஸ்தானில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஏற்கனவே mpox பாதிப்பு பரவியுள்ளதாகவும், சில வாரங்களில் உறுதி செய்யப்படலாம் என்றும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
1970ல் காங்கோ குடியரசில்தான் முதல் முறையாக mpox பாதிப்பு கண்டறியப்பட்டது. மட்டுமின்றி, 2023 செப்டம்பரில் மிக ஆபத்தான Clade 1b வகையும் காங்கோ நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.