புடினுக்கு உக்ரைனின் அடுத்த பேரிடி… கொழுந்துவிட்டெரியும் எண்ணெய்க் கிடங்குகள்
உக்ரைன் தொடுத்த ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய எண்ணெய்க் கிடங்குகள் பல கொழுந்துவிட்டெரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கு கடும் அழுத்தம்
வெளியான காணொளிகளில், மிகப்பெரிய தீப்பிழம்பு வானம் தொடும் அளவுக்கு வெளியேறுவதாகவும், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், ரஷ்யாவுக்குள் சுமார் 125 மைல்கள் தொலைவில் குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, உக்ரைன் தரப்பு தொடர்ந்து ரஷ்யாவுக்கு கடும் அழுத்தமளித்தும் வருகிறது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், ரஷ்யாவின் Proletarsk டீசல் கிடங்குகள் மீதே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது இது Rostov பிராந்தியத்தில் அமைந்துள்ளது. குறைந்தது ஐந்து காமிகேஸ் ட்ரோன்களை உக்ரைன் தாக்குதலில் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், தீயணைப்பு ரயில் ஒன்றை அப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் தாக்குதலை முறியடித்துள்ளதாகவே ரஷ்ய அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளனர்.
மிகப்பெரிய தாக்குதல்
மேலும், வெடிச்சத்தம் என்பது ட்ரோன்கள் வெடித்ததால் ஏற்பட்டவை என்றும் தெரிவித்தனர். ஆனால் அதன் பின்னரே, எண்ணெய்க் கிடங்குகள் சேதப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது.
இப்பகுதியில் இருந்தே ராணுவ வாகனங்களுக்கான எரிபொருள் அனுப்பப்படுகிறது. இதனால் இது திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்றே கூறுகின்றனர். இது விளாடிமிர் புடினின் போர் தந்திரங்களுக்கு கிடைத்த பேரிடியாகவே பார்க்கப்படுகிறது.
இதனிடையே உக்ரைன் தரப்பு தொடர்ந்து ரஷ்யாவுக்குள் முன்னேறி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளை விளாடிமிர் புடின் சொந்தம் கொண்டாட முடியாதவகையில் நெருக்கடி அளிக்கவே ஜெலெஸ்ன்கி ஊடுருவலை முன்னெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ரஷ்யா மீது முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய தாக்குதல் இதுவென்றே கூறப்படுகிறது.