சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய செயலி
இலங்கையின் (Sri Lanka) சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விடயத்தை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் (SLTPB) தலைவர் சாலக கஜபாகு (Chalaka Gajabahu) தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், குறித்த செயலியானது முழு அளவில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சுற்றுலா
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர், இந்த வருடத்திற்கான வருடாந்த இலக்கான 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அடைவதற்காக, இந்த ஆண்டின் கடைசி ஐந்து மாதங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் இலங்கையில் சுற்றுலாத்துறை விரிவாக்கத்திற்காக மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் சாதகமான முடிவுகளை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.