வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வழியாக தங்க கடத்தல்.., பூக்களுக்குள் மறைத்திருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள்
செயற்கை பூக்களுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து குவைத்தில் இருந்து கொச்சி விமானத்தில் கடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கம் கடத்தல்
நீண்ட காலமாகவே வளைகுடா நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் வழியாக தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருகின்றனர். அவற்றை சோதனை செய்து சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்தவகையில், குவைத்தில் இருந்து கொச்சி நெடும்பசேரி விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தது.
அதனடிப்படையில், அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.
அந்த பெண்ணிடம் இருந்த பையில் செயற்கை பூக்கள் மற்றும் ஸ்குரு டிரைவர்கள் இருந்தது. அவற்றை சோதனை செய்தபோது தான் அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, செயற்கை பூக்களின் கைப்பிடியை தங்ககம்பிகளாக்கியும், அதனை இரும்பு நிற பொருட்களால் பூசியும், ஸ்குரு டிரைவர்களின் கைப்பிடிக்குள் வைத்தும் கொண்டு வந்துள்ளார்.
ரூ.61 லட்சம் மதிப்பிலான 918 கிராம் தங்கம் கடத்தி வந்துள்ளார். அவற்றை பறிமுதல செய்த சுங்கத்துறையினர் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கம் கடத்தி வந்தது பெங்களூரைச் சேர்ந்த முபீனா என்ற பெண் என்பது தெரியவந்துள்ளது.