ஒடிசாவில் மின்னல் தாக்கி 2 நாட்களில் 15 பேர் பலி
ஒடிசாவின் ஐந்து வெவ்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் 6 பேர் பலியாகினர்.
ஒடிசா மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் கேந்திரபரா மாவட்டத்தில் 2 பேரும், பாலசோர், பத்ரக், ஜாஜ்புர் மற்றும் சுபர்னாபுர் ஆகிய இடங்களில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். இத்துடன் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களில் மின்னல் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மின்னல் தாக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மாஜி, காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஒடிசாவில் மின்னல் தாக்கி இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்கி மட்டும் சுமார் 300 பேர் இறக்கின்றனர். இதனிடையே, ஒடிசாவில் மின்னல் இறப்பு எண்ணிக்கையை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.