கேரள சிறை கைதிகள் தயாரிக்கும் பிரியாணியால் கிடைக்கும் பல கோடி வருமானம்
கேரளாவில் உள்ள சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் பிரியாணி மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைப்பதாக தகவல் வந்துள்ளது.
சிறை கைதிகள்
கடந்த 2010 -ம் ஆண்டில் கேரளாவில் உள்ள சிறைகளில் “புட் பார் பிரீடம்” என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனால், சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ருசியான உணவுகள் வழங்கப்பட்டது. அதேபோல, கைதிகள் தயாரிக்கும் உணவுகளும் வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்டது.
அந்தவகையில், திருவனந்தபுரம், திருச்சூர், கண்ணூர், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல இடங்களில் இருக்கும் 21 சிறைகளில் இருந்து உணவுகள் தயாரிக்கப்பட்டன.
இதில் கண்ணூர் சிறைக் கைதிகள் தயாரிக்கும் சிக்கன் பிரியாணி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அமோகமாக விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து கண்ணூர் சிறை அதிகாரிகள் கூறுகையில், ““புட் பார் பிரீடம்” என்னும் திட்டம் மூலம் சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட பிரியாணி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை நேரடியாகவும் ஓன்லைன் வாயிலாகவும் விற்பனை செய்து வருகிறோம். அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8.5 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மேலும், சிறை கைதிகளுக்கு தொழில் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதனால், கைதிகள் சிறையில் இருந்து வெளியில் சென்றவுடன் ஹொட்டல் நடத்த முடியும்” என்றார்கள்.
உணவு தானியங்கள், இறைச்சி விலை உயர்வு காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் கைதிகள் தயாரிக்கும் உணவு வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டது. இருந்த போதிலும் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.