உடலில் ஒரே துணிதான்; வழிந்த ரத்தம் – கொல்கத்தா மருத்துவரின் தாய் கதறல்!
கொல்கத்தா மருத்துவரின் தாய் அளித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் மருத்துவர் கொலை
கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில் தூங்க சென்ற பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக டெல்லியை சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, அடுத்த கட்டமாக நீதிமன்ற அனுமதியுடன் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அவரது தாய் கூறுகையில், எங்களுக்கு மருத்துவமனையில் இருந்து முதலில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, உங்களுடைய மகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு கட் செய்தனர். நாங்கள் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு மீண்டும் பேசியபோது, மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டனர்.
தாய் வேதனை
மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தபோது உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார் என உதவி கண்காணிப்பாளர் கூறினார். எங்கள் மகள் வியாழக்கிழமை இரவுப் பணிக்குச் சென்றார். வெள்ளிக்கிழமை 10.53 மணியளவில் எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
இதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு நாங்கள் சென்ற நிலையில், எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மகளைப் பார்க்கவே விடவில்லை. 3 மணியளவில் எங்களது மகளைப் பார்க்க அனுமதித்தார்கள். அப்போது அவளது உடம்பில் ஒரே ஒரு துணி மட்டும்தான் இருந்தது.
கண்கள், வாயில் இருந்து ரத்தம் வடிந்திருந்தது. கை உடைக்கப்பட்டிருந்தது. அவரைப் பார்த்ததுமே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அங்கிருந்தவர்களிடமும் இதுகுறித்து கூறினோம். எங்களுடைய மகளை டாக்டராக்க வேண்டும் என பாடுபட்டோம்.
உண்மையான குற்றவாளி?
ஆனால், இப்படி கொலை செய்துவிட்டார்கள். இச்சம்பவத்தில் ஆரம்பத்தில் இருந்தே உரிய விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, மிகவும் அதிருப்திதான் எங்களுக்கு. இந்த கொடூர சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டுள்ளனர் என நாங்கள் சந்தேகப்படுகிறோம். முதல்வர் மம்தா உண்மையான குற்றவாளியை உடனடியாக கைது செய்வோம் என்றார்.
ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஒருவர் மட்டும்தான் கைது செய்யப்பட்டுள்ளார். நாங்கள் நிச்சயமாக சொல்கிறோம் இந்தப் பிரச்னையில் நிறைய பேருக்கு தொடர்பு உள்ளது. ஒட்டுமொத்த துறையும் இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்.
போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று மட்டும்தான் முதல்வர் நினைக்கிறார். காவல் துறை இதில் தீவிரமாக செயல்படவில்லை. எனது மகளின் உடலை அடக்கம் செய்வதில் மட்டும்தான் காவல் துறையினர் முனைப்பாக இருந்தார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.