கொல்கத்தா மருத்துவர் வழக்கு: உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி?
புது தில்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதாகியிருக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சஞ்சாய் ராய்க்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐக்கு அனுமதி கிடைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தில், இது தொடர்பாக சிபிஐ மனு தாக்கல் செய்திருந்ததாகவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதாகவும் உறுதி செய்யப்படாதத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மற்றும் விசாரணையில் உள்ளவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதி பெறவேண்டியது அவசியம். ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தொடர்ந்து மனநல சோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது உண்மை கண்டறியும் சோதனைக்கு சிபிஐ திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், விசாரணையின் போது இருவரும் சொன்ன தகவல்களும் உண்மை கண்டறியும் சோதனையின்போது கூறும் தகவல்களும் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அக்கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷிடம் நான்காவது நாளாக திங்கள்கிழமையும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த வழக்கில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சந்தீப் கோஷிடம் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. நாள்தோறும் இவரிடம் சுமார் 13 – 14 மணி நேரம் கேள்விகளால் துளைத்தெடுக்கிறது சிபிஐ என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.