சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- களை கட்டும் அறுகம்பை உல்லை பகுதி(video/photoes)
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளால் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.இதனால் அருகம்பே வளைகுடா கடற்கரையை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கடற்கரைப் பகுதிகள் சர்வதேச அரங்கில்பல்வேறு தர இடத்தினைப் பெற்றிருக்கின்றன.அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அறுகம்பே கடற்கரைப் பிரதேசதம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால் இப்பிரதேசத்திற்கு தினமும் உள்ளுர் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதினைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர்.
கடந்த கால கொரோனா அனர்த்தம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பொருளாதார சீர்கேடு (எரிபொருள் பற்றாக்குறை எரிவாயு பற்றாக்குறை) அரகல கிளர்ச்சி உள்ளிட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இப்பிரதேச சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.எனினும் தற்போது நாடு மீளளெழுச்சி பெற்று வருவதனால் இப்பிரதேசத்தின் துறைசார்ந்த மக்களின் வாழ்வாதார விருத்தி ஏற்பட்டு வருவதுடன் வர்த்தக பொருளாதார ரீதியிலான மேம்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.இங்கு வருகை தரும் உள்ளுர் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப் படுத்துவதற்காகவும் கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களையும் பாதுகாப்பதற்கென அரச பாதுகாப்புப் படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அண்மையில் கூட உள்ளுர் பயணிகள் 5 பேர் கடலலையில் சிக்குண்ட நிலையில் அங்கு நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப்படையின் உயிர் காப்பு படையினரால் காப்பாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர இப்பகுதிகளில் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வருகையினைப் போல் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதிக்கு விருப்புடன் வருகை தருகின்றனர்.இதனால் தங்குமிட வசதிகள் உணவகங்கள் அதிகளவில் இப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் இக்கடற்கரைப் பிரதேசதம் உலகரங்கில் மிகப் பிரபல்யம் பெறுவதற்கு சர்வதேச அளவில் இக்கடற்பரப்பில் நீரலைச் சறுக்கு விளையாட்டுப் போட்டிகள் வருடந்தோறும் இப்பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றன.இங்கு சர்வதேச ரீதியிலான நீரலைச் சறுக்கு விளையாட்டு இக்கடற்பரப்பில் வருடந்தோறும் இடம்பெறுவதனால் பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டு போட்டியாளர்களும் அவர்களோடு இணைந்ததாக பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் இப்பிராந்தியத்திற்கு வருகை தருவது இலங்கை நாட்டுக்கு அந்நியச் செலாவணியினை பெருமளவில் ஈட்டிக் கொள்வதற்கு வழிகோலியாகவும் அமைகின்றது.
உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இப்பிரதேசத்தில் முகாமிட்டு சில நாட்கள் தங்கியிருந்து இப்பிரதேசத்தின் அழகினை இரசிப்பதனால் இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிலையங்கள் பல்வேறானவை அமையப் பெற்றுள்ளன. இதனால் பெருந்தொகை அந்நியச் செலாவணி நாட்டுக்கு வருமானமாய் கிட்டி வருகின்றன.இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மாத்திரம் சுமார் 30 ஆயிரத்துக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் ஏப்ரல் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை பொத்துவில் அறுகம்பே பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளின் வருகை மற்றும் பொழுது போக்கும் பருவ கால இடமாக கூறப்படுகின்றது.இதை விட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பேராதனைப் பூங்கா, நுவரெலியா , பாசிக்குடா, உல்லை , போன்ற இடங்களுக்கு பெருமளவில் சென்று பொழுதைக்கொண்டாடி உல்லாசமாக கழித்து வருகிறார்கள் .
இந்த வருடத்தில் இதுவரை பன்னிரண்டு லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.இதற்கமைய பொத்துவில் அறுகம்பே பிரதேசத்திற்கு பெருந் தொகையான உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.குறிப்பாக அறுகம்பை உல்லை பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் உள்ளூர் சுற்றுலா பயணிகளும் சரளமாக இணைந்து குதூகலமாக பொழுதைக் கழிப்பதற்காக இப்பிரதேசத்திற்கு படை எடுத்து வருகின்றனர்.
இதை விட கணிசமான வருமானத்தை ஈட்டும் சாத்தியக்கூறுகளுடன் உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக அறுகம்பே சுற்றுலா வலயத்தை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த அருகம்பே வளைகுடா கடற்கரையோரத்தில் பிரபலமாக விளங்கும் நீர் பனிச்சறுக்கு போன்ற நீர் விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் கணிசமான வருமானத்தை அடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்ட சுற்றுலாத்துறையின் முக்கிய பங்குதாரர்களுடன்கடந்த காலத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
2035 ஆம் ஆண்டளவில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை 10% பங்களிப்பை வழங்கும் என உலகளாவிய அறிக்கைகள் முன்னறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான மாற்றத்திற்கு இலங்கை முன்கூட்டியே தயாராகி வருவதைனை அருகம்பே வளைகுடா கடற்கரை வெளிநாட்டு உள்ளுர் பிரயாணிகளின் வருகை உறுதிப்படுத்துகின்றன.