நீரில் மூழ்கியுள்ள களுத்துறை மாவட்டத்தின் பல வீதிகள்
களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் புலத்சிங்கள பிரதேசங்களில் பல வீதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு குக்குலே கங்கை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் மேலும் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்னும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் இன்று (20) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. .