எங்களை ஒருபோதும் விலை பேச முடியாது: சஜித் சூளுரை
என்னையும் எனது குழுவையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலை பேச முடியாது எனவும் நாட்டு மக்களின் ஆணையுடன்தான் ஆட்சிக்கு வருவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மீரிகம நகரில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாவது மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நான் சந்தர்ப்பவாத அரசியலைப் பின்பற்றுவதில்லை. 2018ஆம் ஆண்டு 52 நாள் சூழ்ச்சியின்போது பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு 71 தடவை அழைப்பு விடுத்த போதும் அந்த அழைப்பை நான் நிராகரித்தேன்.
திருடர்களின் பாதுகாவலர்
அந்தப் பிரதமர் பதவிக்கான மக்கள் வரம் எனக்குக் கிடைக்கவில்லை என்பதால் சந்தர்ப்பவாத அரசியலை மேம்படுத்தி பதவிகளின் பின்னால் செல்வதற்கு எனக்கு விருப்பமில்லை.
அந்தக் கொள்கையினால்தான் கோட்டாபய ராஜபக்ச பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க்குமாறு கூறியபோதும் அதனை நான் நிராகரித்தேன். அவ்வாறு அந்தச் சந்தர்ப்பத்தில் சென்று இருந்தால் இந்தச் நாட்டை சூறையாடி வளங்களையும் பணத்தையும் திருடிய திருடர்களின் பாதுகாவலராக நான் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
திருடர்களைப் பாதுகாக்கின்ற வாயில் காவலாளியாகவும் இருந்திருப்பேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொறுப்புகளின் ஊடாகவும் பணத்துக்காகவும் சோரம் போவதற்கு தயார் இல்லை.
விலை பேச முடியாது
எந்தவொரு பிரபலமான பதவியாக இருந்தாலும் எவ்வாறான முன்மொழிவுகளை முன்வைத்தாலும் பொதுமக்களை மையப்படுத்திய அரசியலில் இருந்து விலகி செயற்படப்போவதில்லை.
சஜித் பிரேமதாஸ ஆகிய என்னையும் எனது குழுவையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விலை பேச முடியாது. நாட்டு மக்களின் ஆணையுடன்தான் ஆட்சிக்கு வருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.