சுவிட்சர்லாந்தில் வீட்டின் முன் கிடந்த குப்பைக் கவரை எடுத்த நபர்; அடுத்து நிகழ்ந்த பயங்கரம்
சுவிஸ் நகரமொன்றில், தன் வீட்டின் முன் யாரோ குப்பைக் கவர் ஒன்றை போட்டிருப்பதைக் கண்ட அந்த வீட்டின் உரிமையாளர், அதை அங்கிருந்து அகற்ற முயன்றபோது, அது திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குப்பை கவரை எடுத்த நபர்; அடுத்து நிகழ்ந்த பயங்கரம்
ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலை 7.30 மணிக்கு, தன் வீட்டின் முன் குப்பைக் கவர் ஒன்று கிடப்பதைக் கண்டு, அதை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.
ஆனால், அவர் அதை எடுத்ததும், அது வெடித்துச் சிதறியுள்ளது. அதாவது, அந்தக் கவருக்குள் சிறிய வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டு, அதை எடுத்ததும் வெடிக்கும் வகையில் அது அமைக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அங்கு விரைந்த பொலிசார், அந்தக் கட்டிடத்தில் வேறு எங்காவது அந்தேகத்துக்குரிய பொருட்கள் உள்ளனவா என தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
அந்த பகுதியில் வாழும் மக்களை, வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள். அத்தியாவசிய காரணங்களுக்காக யாராவது வெளியே செல்லவேண்டிவந்தால், அவர்களுடன் பொலிசார் ஒருவரோ அல்லது தீயணைப்பு வீரர்களோ செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதிர்ச்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், அது தாக்குதல் என தெரியவருமானால், விசாரணை, சுவிஸ் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்துக்கு மாற்றப்படும் என்று கூறியுள்ளார்கள்.
இதற்கிடையில், அந்த குப்பைக் கவரை எடுத்த நபருக்கு கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும், அந்த வெடிவிபத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.