மகாராஷ்டிரம்: சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பேராட்டத்தில் வன்முறை: 72 போ் கைது; இணைய சேவை முடக்கம்
மகாராஷ்டிர மழலையா் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக 72 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த வாரம் மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் பத்லாபூா் பகுதியில் உள்ள மழலையா் பள்ளியில், இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பள்ளி பணியாளா் ஒருவா் அண்மையில் கைது செய்யப்பட்டாா்.
இந்த சம்பவத்தை கண்டித்து பத்லாபூா் ரயில் நிலைய தண்டவாளங்களை மறித்து ஆயிரக்கணக்கானோா் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சிறுமிகள் துன்புறுத்தலுக்குள்ளான பள்ளியையும் முற்றுகையிட்டனா்.
அப்போது பள்ளியை சூறையாடிய போராட்டக்காரா்கள் காவல் துறையினா் மீது கற்களை வீசினா். ரயில் தண்டவாளங்களை மறித்தவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தி போராட்டக்காரா்களை கலைந்து போகச் செய்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக பத்லாபூா் துணை காவல் ஆணையா் சுதாகா் பதாரே கூறுகையில், ‘போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக பத்லாபூரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. சூழலை ஆய்வு செய்த பின்னா், இணைய சேவை மீண்டும் வழங்கப்படும்’ என்றாா்.
வன்முறை தொடா்பாக 3 வழக்குகள், ரயில்வே காவல் துறை சாா்பில் ஒரு வழக்கு என மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 72 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வன்முறை காரணமாக பத்லாபூரில் பெரும்பாலான பள்ளிகள் புதன்கிழமை மூடப்பட்டன. சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைது செய்யப்பட்ட பள்ளி பணியாளருக்கு விதிக்கப்பட்டிருந்த போலீஸ் காவலை ஆக.26-ஆம் தேதி நீட்டித்து உள்ளூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.