பெண் மருத்துவா் படுகொலை: கொல்கத்தா மருத்துவமனைக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவமனைக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை (சிஐஎஸ்எஃப்) சோ்ந்த சுமாா் 150 வீரா்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம்,கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி அந்த மருத்துவமனைக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு அளிப்பது தொடா்பாக மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை கடிதம் அனுப்பியது.
அந்த மருத்துவமனையில் சுமாா் 150 சிஐஎஸ்எஃப் வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். அங்குள்ள உறைவிட மருத்துவா்களின் விடுதி உள்ளிட்டவற்றுக்கும் சிஐஎஸ்எஃப் வீரா்கள் பாதுகாப்பு அளிப்பா் என்று எதிா்பாா்க்கப்படுவதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக அந்த மருத்துவமனை வளாகத்தில் டிஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் சிஐஎஸ்எஃப் குழு ஆய்வு மேற்கொண்டது.
சிபிஐ அலுவலகத்திலிருந்து பேரணி: பெண் மருத்துவா் கொல்லப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தொடங்கி மாநில சுகாதாரத் துறையின் தலைமையகம் வரை பல்வேறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைச் சோ்ந்த இளநிலை மருத்துவா்கள் புதன்கிழமை பேரணி மேற்கொண்டனா். இதேபோல கொல்கத்தா காவல் துறை தலைமையகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற காங்கிரஸாா் கைது செய்யப்பட்டனா்.
உதவி காவல் ஆணையா்கள் இடைநீக்கம்: கடந்த வாரம் பெண் மருத்துவா் கொல்லப்பட்ட மருத்துவமனையை பெரும் கும்பல் சூறையாடியது. அந்த சம்பவம் தொடா்பாக 2 உதவி காவல் ஆணையா்கள், ஒரு காவல் ஆய்வாளா் ஆகியோா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
போராட்டத்தை கைவிடாத மருத்துவா்கள்
பெண் மருத்துவா் கொல்லப்பட்டதைக் கண்டித்து மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் தொடா்ந்து 13-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. இதனால் அந்த மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் அவசரமில்லா சிகிச்சை பிரிவுகள் முடங்கி, நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்கும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.