யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் – 2024
யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் 2வது காலாண்டுக்குரிய குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (22.08.2024) மு. ப 9.00 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்கள் பிரதேச செயலகங்களுக்கு கிடைக்கப்பெறும் சிறுவர் முறைப்பாடுகள் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கூறியதுடன், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர், பெண்கள் ,முதியோா் தொடர்பான உத்தியோகத்தர்கள் மேற்படி பகுதியினர் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடி ஒக்டோபர் 15ம் திகதிக்கு முன்னதாக மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிடுமாறும் தெரிவித்திருந்தார்.
மேலும் பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடுகள், சிறுவர் துஸ்பிரயோகம், பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பெற்றுக் கொடுத்தல் , பிரதேச மட்ட சிறுவர் பெண்கள் முறைப்பாடுகள், பிரதேச மட்டத்தில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் , பாடசாலை பஸ் சேவை போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் , உதவி பிரதேச செயலாளர்கள்,வலயக்கல்விப் பணிப்பாளர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.