டேட்டிங் வேண்டாம்: ரஷ்ய குடிமக்களுக்கு புடின் உத்தரவு
உக்ரைன் எல்லையருகே வாழும் ரஷ்ய குடிமக்கள் டேட்டிங் ஆப்களை பயன்படுத்தவேண்டாம் என ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்ய குடிமக்களுக்கு புடின் உத்தரவு
ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் படைகள், Kursk பகுதியில் 440 சதுர மைல் பரப்பை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளன.
இந்நிலையில், Kursk, Belgorod மற்றும் Bryansk பகுதிகளில் வாழும் ரஷ்யர்கள், டேட்டிங் ஆப்களை பயன்படுத்தவேண்டாம் என ரஷ்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
காரணம் என்ன?
இப்படி மக்களுடைய தனியுரிமைக்குள் அரசு தலையிடக் காரணம் என்ன?
அதாவது, டேட்டிங் ஆப்கள் மூலம் பெண்களிடம் பழகுவதாக நினைத்துக்கொண்டு, உக்ரைன் உளவாளிகளிடம் தங்களைக் குறித்த விவரங்களை வெளியிட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, உக்ரைன் எல்லையோரமாக அமைந்துள்ள ரஷ்யப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும், அங்கு தங்கியிருக்கும் ரஷ்யப் படைவீரர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தங்கள் கார்களிலுள்ள டேஷ்கேம் கமெராக்களில் பதிவாகியுள்ள வீடியோக்களை பப்ளிஷ் செய்யவேண்டாம் என்றும் ரஷ்யர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அந்த வீடியோக்களை வெளியிடுவதால், மக்கள் நடமாட்டம் குறித்து உக்ரைன் படைகள் அறிந்துகொள்ளக்கூடும் என ரஷ்யா கருதுகிறது.
மேலும், புடினுடைய பாதுகாவலர்களும், ரஷ்ய ராணுவ வீரர்களும் டெலிகிராம் ஆப்பில் சில குறிப்பிட்ட விடயங்களை செயலிழக்கச் செய்யுமாறும், முன்பின் தெரியாத நபர்கள் அனுப்பும் இணைப்புகளை திறக்கவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
எல்லாவற்றிற்கும் மேல், ரஷ்யக் குடிமக்கள், ரஷ்ய ரகசிய பாதுகாப்பு படை அல்லது ராணுவத்திலிருக்கும் தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களின் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தங்கள் தொலை தொடர்பு கருவிகளிலிருந்து நீக்கிவிடுமாறும் ரஷ்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.