எலிசபெத் ராணியாரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டேனா… விளக்கமளித்த டொனால்டு ட்ரம்ப்
மறைந்த பிரித்தானிய ராணியார் எலிசபெத் தொடர்பில் வெளியாகவிருக்கும் நூலில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அவர் மறுத்துள்ளார்.
முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக
பிரித்தானிய ராணியார் எலிசபெத்திடம் தாம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல் என்றும், உண்மையில் அமெரிக்க ஜனாதிபதிகளில் ராணியாருக்கு மிகவும் பிடித்தமான நபர் தாம் என்றே தெரிய வந்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தமது அரசுமுறை பயணத்தின் போது, பல மணி நேரம் ராணியாருடன் செலவிட வாய்ப்பு அமைந்தது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அது தமக்கு கிடைத்த மறக்க முடியாத தருணம் என்றார்.
தொடர்புடைய நூலில், தமக்கு விருப்பமில்லாத விருந்தினர்களிடம் ராணியார் எவ்வாறு நடந்துகொள்வார் என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் டொனால்டு ட்ரம்ப் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது மனைவி மெலனியாவுடன் ட்ரம்ப் ஏதேனும் ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பார், இல்லையென்றால் இப்படியான ஒரு நபருடன் அவர் ஏன் குடும்பம் நடத்த வேண்டும் என்றும் ராணியார் குறிப்பிட்டதாக அந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நூல் விற்பனைக்காக
ஆனால் தொடர்புடைய நூலில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்றே ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எழுதியவர் யார் என தெரியவில்லை, ஆனால் அதில் எதுவும் உண்மை இல்லை என்றே டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரச குடும்பத்தோடு மிகுந்த ஆதரவு கொண்ட டொனால்டு ட்ரம்ப், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியுள்ள ஹரி தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
தாம் மீண்டும் ஜனாதிபதியனால், அமெரிக்காவைவிட்டு ஹரி வெளியேற்றப்படுவார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். தற்போது நூல் விற்பனைக்காக கட்டுக்கதைகளை பதிவு செய்துள்ளதாக ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.