பிரான்சில் அரசு கட்டிடத்திற்குள் ராணுவ உடையில் நுழைந்த நபர் செய்த விடயம்: பொலிசார் அதிரடி
பிரெஞ்சு நகரமொன்றில், அரசு கட்டிடம் ஒன்றிற்கு தீவைத்த நபர் ஒருவரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டனர்.
பிரான்சில் அரசு கட்டிடத்திற்கு தீவைத்த நபர்
நேற்று மேற்கு பிரான்சிலுள்ள Angoulême நகரில், அரசு கட்டிடம் ஒன்றில் பெண்கள் சிலர் உட்பட, உள்ளூர் கவுன்சிலர்கள் சிலர் பணி செய்துகொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, ராணுவ உடை அணிந்த ஒருவர் அந்த கட்டிடத்துக்குள் திடீரென நுழைந்துள்ளார். அந்த 19ஆம் நூற்றாண்டு கால கட்டிடத்தின் முதல் தளத்திலுள்ள ஒரு அறையில் பெட்ரோலை ஊற்றியுள்ளார் அவர்.
உடனடியாக அந்த பெண்கள் வெளியே ஓடிவந்து உதவி கோரி அழைத்துள்ளார்கள். பொலிசாருக்கும் தகவலளிக்கப்பட்டுள்ளது.
அதற்குள் அந்த நபர் அந்த அறைக்கு தீவைக்க, பொலிசார் அவரை பிடிக்க முயன்றும் முடியாததால், அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க, படுகாயமடைந்த அந்த நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் வேறு யாரும் காயமடையவில்லை என்று பொலிசார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ள நிலையில், தீவைத்த நபர் ஒரு பிரெஞ்சுக் குடிமகன் என்று மட்டும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.