மாநிலம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளில் சிசிடிவி கட்டாயம் – மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு…
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் உள்ள பள்ளி ஒன்றில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கல்வி நிலையங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிசிடிவி கட்டாயம் நிறுவப்பட்டிருக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்வி நிலையங்களில் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கல்வி நிலையங்களில் பணிபுரியும் காவலாளிகள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோரின் பின்புலங்களை ஆராய்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் புகார் பெட்டிகளை அமைத்து அவற்றில் பெறப்படும் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.