;
Athirady Tamil News

சமூக சேவைகளை மக்கள் வரவேற்பது வேறு. ஆனால் அதனை எதிர்பார்த்து எனது சேவைகளை நான் செய்வதில்லை – சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள்

0

சமூக சேவைகளை மக்கள் வரவேற்பது வேறு. ஆனால் அதனை எதிர்பார்த்து எனது சேவைகளை நான் செய்வதில்லை என தெரிவித்த சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள், இன மத பேதமின்றி தான் செயற்படுவதாக தெரிவித்தார்.

சந்நிதியான் ஆச்சிரம சுவாமிகளின் பவள விழாவும் அறம் பாலிக்கும் ஞான மோகனம் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இது தொடர்பிலான ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே மோகனதாஸ் சுவாமிகள் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நான் சில செயற்பாடுகளை செய்யும்போது அவர்கள் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என சிலர் எனக்கு சொல்வார்கள். ஆனால் அவர்களும் மனிதர்கள் தானே. உதவி செய்யவேண்டிய இடத்தில் அனைவருடனும் ஒத்து கொடுக்கவேண்டும். நீ கிறீஸ்தவன் நீ முஸ்லிம் என சொல்ல முடியுமா? அதை நாங்கள் சரியாக செய்யவேண்டும். அதுவே மனித நீதி.

இங்கு சுற்றுலா வரும்போது முஸ்லீம்கள், கிறிஸ்தவ பாடசாலை மாணவர்கள் பலரும் பசியாறுகின்றனர். அதனை பிரித்து விட முடியுமா? இவ்வாறு பார்த்தால் சமூகத்தில் சேவை செய்ய முடியாது.

இருபது வருடங்களாக கோவில்களுக்கு செல்வதில்லை. ஆச்சிரமத்தில் இருந்து புறப்படும் போது இதில் இருந்து வணங்குவேன். ஒரு விதமான கோவிலுக்கும் செல்வதில்லை. சமுக பணிகள் செய்யும்போது கதிர்காமம், உகந்தை என சில கோவில்களுக்கு போயிருக்கிறேன்.

எங்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் நேரடியாக சென்று உதவி செய்வோம். வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட்ட நேரங்களில் கிழக்கு, மலையகம், வன்னி என பல இடங்களுக்கும் சென்று உதவி செய்வோம். பத்திரிகைகள் படிக்கும் போது அதில் எதாவது செய்திகளை பார்த்தால் அதனை விசாரித்து உதவிகளை செய்வோம்.

உதவி செய்யப் போகின்றோம் என்பதற்காக இதுவரை யாரிடம் கை நீட்டி பணம் வாங்கியதில்லை. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதில்லை. உதவி செய்யுங்கள் கடிதம் எழுதியதில்லை. ஆனால் சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு ஆரம்ப காலத்தில் உதவி செய்த ஒரு சிலரிடம் நாம் உதவி கேட்போம். அவர்களை மதிக்க வேண்டும் என்பதற்காக.

கணக்கு வழக்கு பார்ப்பதில்லை. இங்கு உதவி செய்பவர்களும் அதனை பார்ப்பதில்லை. இங்கு ஒரு கள்ளமும் இல்லை. வெளிப்படையாகவே செய்யப்படுகிறது.

சந்நிதியானுக்கு மட்டுமே நான் பயப்படுவேன். கை நீட்டி பணம் வாங்கினாலே உங்களுக்கு பயப்பட வேண்டும். நான் சொல்வதெல்லாம் உண்மை.

நிதி உதவி கேட்கும்போதே சில நாட்கள் யோசிப்போம். பொருள் உதவிகளை உடனடியாகவே வழங்குவோம்.

குருதி மாற்று சிகிச்சை நிலையத்துக்கு பணம் வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் என்னிடம் கோரியிருந்தது. அதனை பார்ப்போம் என கூறியிருந்தேன். சில தினங்களில் பணம் வந்தது. வைத்தியசாலை நிர்வாகத்தினரை அழைத்து ஐந்து இலட்சம் வரையான பணத்தை கையளித்தோம்.

சந்நிதியான் தருகிறான். நாம் வழங்குகிறோம். நான் யாரிடமும் கைநீட்டி பணம் வாங்கியதாக யாரும் சொல்லமாட்டார்கள். ஆரம்பத்தில் ஐந்தாறு பேர் இருந்தார்கள். கஷ்டமான நேரத்தில் எம்மை வளர்த்தவர்கள் அவர்களே. நான் எம்மவர்களுக்கு சொல்வது அவர்களை எப்போதுமே கனம் பண்ணவேண்டும் என்று. ஆனால் தற்போது மரம் பழுத்துவிட்டது. வௌவால்கள் தூங்குகிறது. ஆனால் வருபவர்கள் அனைவரையும் சரிசமமாகவே நடத்துவோம்.

உதவி செய்வதற்காக வாகனங்கள் இருக்கின்றது. அதில் சென்றே வெளி மாவட்டங்களில் தேவையான உதவிகளை செய்வோம். வாகனங்களை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதில்லை. வாகனங்களில் சென்று பவுசு காட்டுவதும் இல்லை. இதுவே எனது கோலம்.

ஆனால் இதனை வெளியில் சொல்வதற்கு எனக்கு பிடிக்காது. ஆனால் இம்முறை எனது 75வது ஆண்டு பிறந்தநாளை பவளவிழாவாக கொண்டாட பலரும் விரும்புகின்றனர்.

சமூக சேவைகளை மக்கள் வரவேற்பது வேறு. ஆனால் அதனை எதிர்பார்த்து எனது சேவைகளை நான் செய்வதில்லை. அந்த நேரத்தில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவர்களின் கஷ்டம் தீர்க்கப்பட வேண்டும் – என்றார்.

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில்
எழுபத்தைந்தாவது அகவையில் கால் பதிக்கும் மோகனதாஸ் சுவாமிகளின் பவள விழாவும் அறம் பாலிக்கும் ஞான மோகனம் நூல் வெளியீடும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 31ம் திகதி காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

சந்நிதியான் ஆச்சிரமத்தின் மூலம் நித்திய அன்னப் பணி, நிவாரண உதவி,வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாட்டுக்கு உதவி செய்தல், குடிநீர் சுத்திகரிப்பு, அறநெறி பாடசாலைகளுக்கு உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.