அதற்கான நேரம் இது… காஸா போர் குறித்து கமலா ஹாரிஸ் வெளிப்படை
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ், இஸ்ரேல் – காஸா போர் குறித்தும், உக்ரைன் – ரஷ்யா போர் குறித்தும் வெளிப்படையாக தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.
காஸா போர் நிறுத்தம்
தாம் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததும் காஸா போர் நிறுத்தம் தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றே ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜோ பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கு ஆதரவாக முடிவெடுத்துவரும் நிலையில், ஹாரிஸ் காஸா தொடர்பில், பாலஸ்தீன ஆதரவு முடிவுக்கு வந்துள்ளது புதிய நம்பிக்கை அளிப்பதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்கனவே, காஸாவில் அப்பாவி மக்கள் கொத்தாக கொல்லப்படுவதை தம்மால் வேடிக்கை பார்க்க முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் நேரிடையாக பேசியவர் கமலா ஹாரிஸ்.
தற்போது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவதை ஏற்றுக்கொள்ளும் கூட்டத்தில் உரையாற்றியுள்ள ஹாரிஸ், ஹமாஸ் படைகளுடன் பணயக்கைதிகள் ஒப்பந்தம் மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்ய வேண்டிய நேரம் இது என்றார்.
நெஞ்சை பதற வைக்கிறது
மேலும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறன் இஸ்ரேலுக்கு எப்போதும் இருப்பதை உறுதி செய்வேன் என்றும் விளக்கமளித்துள்ளார். அத்துடன், கடந்த 10 மாதங்களில் காஸாவில் நடந்தவை கொடூரத்தின் உச்சம் என குறிப்பிட்டுள்ள ஹாரிஸ்,
அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதையும் பட்டினி மற்றும் பாதுகாப்பு தேடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளதையும் குறிப்பிட்ட அவர், அங்குள்ள நிலை நெஞ்சை பதற வைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, காஸாவில் துன்பங்கள் முடிவுக்கு வந்து, பாலஸ்தீன மக்கள் தங்கள் கண்ணியம், பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமையை உணர முடியும் என்பதே அமெரிக்காவின் இலக்காக உள்ளது என்றார்.