ஏழு நாடுகளில்… உலகில் முதல் முறையாக நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி சோதனை
உலகில் முதல் mRNA நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி சோதனையை மருத்துவர்கள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 1.8 மில்லியன் நோயாளிகள்
இதனால் ஆயிரக்கணக்கான உயிர்களை இனி காப்பாற்ற முடியும் என நிபுணர்கள் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. புற்றுநோய் இறப்புகளில் உலகில் அதிகமானோர் நுரையீரல் புற்றுநோய் காரணமாகவே இறக்கின்றனர்.
வெளியான தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 மில்லியன் நோயாளிகள் இதனால் இறக்கின்றனர். மேலும், தீவிர சிகிச்சை மூலமாக உயிர் தப்புபவர்கள் எண்ணிக்கையும் மிக மிக குறைவு.
ஆனால் தற்போது புதிய தடுப்பூசி ஒன்றை நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர். இது புற்றுநோய் செல்களை அழிக்கும். அத்துடன், மிக முக்கியமாக மீண்டும் பாதிப்பு ஏற்படாதவாறு தடுக்கும்.
BioNTech நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியின் பெயர் BNT116 என்றே குறிப்பிடுகின்றனர். நுரையீரல் புற்றுநோயில் பரவலாக கண்டறியப்படும் NSCLC என்ற வகையை குணப்படுத்தும் நோக்கில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 7 நாடுகளில் 34 ஆய்வு மையங்களில் தற்போது இந்த தடுப்பூசி சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, ஹங்கேரி, போலந்து, ஸ்பெயின் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் தற்போது முதற்கட்ட சோதனை முன்னெடுக்கின்றனர்.
பிரித்தானியாவில் 20 நோயாளிகள்
பிரித்தானியாவில் 6 மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நோயாளி ஒருவருக்கு முதல் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 130 நோயாளிகளுக்கு தடுப்பூசி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 20 நோயாளிகள் தெரிவாகியுள்ளனர். கோவிட் தடுப்பூசி போன்றே BNT116 தடுப்பூசியும் உருவாக்கியுள்ளனர். லண்டனை சேர்ந்த 67 வயது நபருக்கு முதல் முறையாக நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் இவருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட நிலையில், உடனையே கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், BNT116 தடுப்பூசி சோதனையில் தெரிவாகியுள்ள இவருக்கு 5 நிமிடங்கள் இடைவெளியில் 30 நிமிடங்களில் 5 முறை மருந்து செலுத்தப்பட்டுள்ளதாகவும்,
அடுத்த 6 வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி பெறுவார் என்றும், அதன் பின்னர் மூன்று வாரத்திற்கு ஒருமுறை என 54 வாரங்களுக்கு தடுப்பூசி பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.