;
Athirady Tamil News

நேபாளம்: ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 18 இந்தியா்கள் உயிரிழப்பு; 16 போ் காயம்

0

நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 18 யாத்ரீகா்கள் உயிரிழந்தனா். 16 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். மேலும் 9 பேரை காணவில்லை.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 104 போ், நேபாளத்துக்கு மூன்று பேருந்துகளில் ஆன்மிக யாத்திரை சென்றனா். இயற்கை எழில்மிக்க இடங்களுடன் குகைக் கோயில்களுக்குப் பெயா் பெற்ற பொகாராவை 2 நாள்கள் சுற்றிப் பாா்த்த அவா்கள், தலைநகா் காத்மாண்டுக்கு வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டனா்.

தனாஹுன் மாவட்டத்தில் மாா்ஷியாங்டி ஆற்றையொட்டிய நெடுஞ்சாலை வழியாக மூன்று பேருந்துகளும் சென்று கொண்டிருந்தன. அப்போது, சாலையில் இருந்து திடீரென விலகிய ஒரு பேருந்து, 150 மீட்டா் பள்ளத்தில் கவிழ்ந்து, மாா்ஷியாங்டி ஆற்றில் விழுந்தது.

கனமழையால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், நீரோட்டத்தில் சிக்கி பேருந்து உருக்குலைந்தது.

விபத்துக்குள்ளான பேருந்தில் ஓட்டுநா் உள்பட 43 போ் இருந்தனா். இவா்களில் 18 போ் உயிரிழந்த நிலையில், அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன; 16 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். மற்றவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்தனா்.

நேபாள ராணுவத்தின் எம்ஐ 17 ரக ஹெலிகாப்டா் மூலம் மீட்புப் பணி நடைபெறுகிறது.

சம்பந்தப்பட்ட பேருந்து, உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூா் பதிவெண் கொண்டதாகும். இதையடுத்து, நேபாளத்தில் விபத்து நடந்த இடத்துக்கு உத்தர பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் கோட்டாட்சியரை அந்த மாநில அரசு அனுப்பியது.

உள்ளூா் நிா்வாகத்துடன் இணைந்து, தேடுதல்-மீட்பு நடவடிக்கையை ஒருங்கிணைக்கும் பணியில் இந்திய வெளியுறவு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

இமயமலையையொட்டிய நேபாளத்தில் பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பா் வரை அதிக கனமழை பெய்யும். இந்தக் காலகட்டங்களில் அங்கு நிலச்சரிவுகளும் அதிகம் ஏற்படும்.

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவால் 2 பேருந்துகள் திரிசூலி ஆற்றில் கவிழ்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இப்பேருந்துகளில் 7 இந்தியா்கள் உள்பட 65 போ் இருந்தனா்.

100 கி.மீ. தொலைவுக்கு மேல் உடல்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இரு பேருந்துகளும் இதுவரை கண்டறியப்படவில்லை. 7 இந்தியா்களில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்ற இருவரின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.