;
Athirady Tamil News

சர்வஜன வாக்கெடுப்பு தேவை என தமிழ் பொது வேட்பாளர் நேரடியாக கேட்க வேண்டும்

0

சர்வஜன வாக்கெடுப்பு தேவை என தமிழ் பொது வேட்பாளர் நேரடியாக கேட்க தவறின் , பொது வேட்பாளருக்கு எதிராக நாம் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம் . கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பொது வேட்பாளரை முன் நிறுத்தி என்ன கோரிக்கையை முன் வைக்க போகிறோம் என்பதே முக்கியம். இன பிரச்னைக்கு இதுவரை தீர்வு இல்லை. அது இனியும் கிடைக்கப்போறதில்லை.

எனவே தமிழ் மக்களாகிய நாம் இலங்கைக்குள் எமக்கு தீர்வு இல்லை என்பதனை சர்வதேச சமூகத்திற்கு சொல்ல வேண்டும்.

நாங்கள் தேசியம் தாயகம் சுயநிர்ணய உரிமை பற்றி தந்தை செல்வா காலத்தில் இருந்து பேசி வருகிறோம்

அதனால் தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதனை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இன்று கட்சிகள் அதனை தீர்மானிக்க முயல்கின்றன. தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதனை பொது வாக்கெடுப்பு மூலமே அறிய முடியும்

பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டியது சர்வதேச சமூகம். ஆனால் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பொது வாக்கெடுப்பாக அமையாது. அதனை பயன்படுத்தி எமது கோரிக்கையை நாம் சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

மக்கள் தமக்கு எது தேவை என்பதனை அவர்கள் தீர்மானிப்பார்கள். வாக்கெடுப்புக்கள் எதுவும் இல்லாமல் , இதான் இவர்களுக்கு தேவை என கட்சிகள் முடிவெடுக்க முடியாது.

எனவே சர்வஜன வாக்கெடுப்பு வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டும். அவ்வாறான கோரிக்கை இல்லாமல் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் அர்த்தம் இல்லை.

கேட்க வேண்டியதை கேட்காது, ஒளித்து மறைத்து தமிழ் பொது வேட்பாளர் செயற்படுவராயின் நாம் கடுமையாக அதனை எதிர்ப்போம்.

தேர்தல் அறிக்கையில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். அதில் ஒளித்து மறைத்து விடயங்கள் சொல்லப்பட்டால் நாம் கட்சியை கூட்டி , என்ன முடிவெடுக்க வேண்டும் என தீர்மானிப்போம்

தமிழரசு கட்சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் சவால் விடுகிறேன். சுயநிர்ணய உரிமை என்பதனை எப்படி பிரயோகிக்க போகிறீங்க ? வாக்கெடுப்பு இல்லாமல் அந்த மக்கள் எதனை விரும்புகிறார்கள் என்பதனை நீங்கள் எப்படி தீர்மானிப்பீர்கள் ?

அவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள் நாங்களும் தொடர்ந்து ஏமார்ந்து கொண்டு இருக்க முடியாது. ஏமாற்றுக்கள் போதும் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.