கொல்கத்தா கொடுமை: குற்றவாளிக்கு மரண தண்டனை கூடாது – ஆதரவாக வாதாடும் பெண் வழக்கறிஞர்!
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சஞ்சய் ராய் சார்பில், மூத்த பெண் வழக்கறிஞர் ஆஜராகியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
கொல்கத்தா, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைதாகி உள்ள நிலையில், சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பெண் வழக்கறிஞர் ஆஜர்
குற்றவாளிகளுக்கு உச்சபட்சமாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளன. மேலும், இச்சம்பவத்தில் சஞ்சய் ராய் மட்டுமின்றி வேறு சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் இது கூட்டு பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் என்றும் சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் சார்பில் மூத்த பெண் வழக்கறிஞர் கபிதா சர்கார்(52) என்பவர் ஆஜராகிறார். சஞ்சய் ராய்க்கு வாதாட எந்த வழக்கறிஞரும் முன்வராத நிலையில், இவரை நீதிமன்றமே நியமித்துள்ளது.
எந்தவித குற்றத்திற்கும் மரண தண்டனை ஒரு தீர்வாக அமையாது என்றும் உச்சபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை இருக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கும் வரை அவர்கள் நிரபராதி. அவர்களின் குற்றங்கள் குறித்து அவர்கள் சிந்திக்க வாய்ப்பளிப்பதும் அவசியம் என கபிதா சர்கார் தெரிவித்துள்ளார்.