ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை தொடர்ந்தும் எதிர்க்கும் இலங்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 46-1 மற்றும் 51-1 தீர்மானங்களை, இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிவிவகார அமைச்சில் கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்திற்கான அலுவலகம்
பொருளாதார மீட்சி, சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த ஆண்டில் இலங்கை அடைந்த பல குறிப்பிடத்தக்க சாதனைகளை அமைச்சர் சப்ரி இந்த மாநாட்டின் போது வலியுறுத்தினார்.
உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சப்ரி சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான விரிவான சட்டத்தை உருவாக்குவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தையும், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் என்பவற்றின் முன்னேற்றங்களையும் அவர் கோடிட்டுக்காட்டினார்.