2025 முதல் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் – அரசு ஊழியர்களுக்கு என்ன பலன்?
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய ஓய்வூதிய திட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தில் (OPS ) பல திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2004ம் ஆண்டு தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS ) கொண்டு வரப்பட்டது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு இணையான பலன்களை தேசிய ஓய்வூதிய திட்டம் வழங்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர்களும், ஊழியர் சங்கங்களும் போராட்டங்களை நடத்தின. சில மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்
இந்நிலையில் நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் குழு ஒன்றை அமைத்த மத்திய அரசு இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் டி.வி.சோமநாதன் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (unified pension scheme) எனும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 23 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலன்கள்
இந்த திட்டத்தின் படி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக கடைசி 12 மாதங்கள் வாங்கிய அடிப்படை சம்பளத்தின் சராசரியின் 50 சதவிகிதம் வழங்குவதை உறுதி செய்கிறது. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு இது கிடைக்கும்.
ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு, அவரது வாழ்க்கை துணை, கடைசியாக பெறப்பட்ட ஓய்வூதியத்தில் 60 சதவீதத்தை பெறுவார்.
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி செய்வோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக, ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.10,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஒய்வூதிய திட்டத்தின்படி, ஓய்வூதிய நிதிக்கு, ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து 10% பங்களிக்க வேண்டும். அரசின் பங்களிப்பு 14 சதவிகிதமாக இருக்கும். புதிய ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு 18 ஆக அதிகரிக்கப்படுகிறது.
நரேந்திர மோடி
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “தேசத்தின் முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைக்கும் அரசு ஊழியர்களை எண்ணி பெருமை கொள்கிறேன். அவர்களது கண்ணியத்தையும், நிதி பாதுகாப்பையும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் உறுதி செய்கிறது. அவர்களது நலன் சார்ந்தும், எதிர்காலம் சார்ந்தும் இந்த அரசு கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை இது பிரதிபலிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
தேசிய ஓய்வூதிய திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.