பாலஸ்தீன மக்களுக்காக… ஜேர்மனியை உலுக்கிய மூவர் கொலையில் அதிர்ச்சி பின்னணி
ஜேர்மனியில் விழா ஒன்றில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட நிலையில், தப்பியோடிய தாக்குதல்தாரியை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையான சந்தேக நபர்
தொடர்புடைய தாக்குதல் சம்பவத்திற்கு, இந்த நிலையில் ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் ஜேர்மனியின் Solingen பகுதியில் விழா ஒன்றில் புகுந்து தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பியிருந்தார்.
இதனையடுத்து, வெள்ளிக்கிழமை தொடங்கிய தேடுதல் நடவடிக்கை, சனிக்கிழமை முடிவுக்கு வந்துள்ளது. உண்மையான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக சனிக்கிழமை இரவு அமைச்சர் ஒருவர் தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஐ.எஸ் அமைப்பின் சமூக ஊடகக் குழு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், Solingen பகுதியில் தாக்குதலை முன்னெடுத்தவர் தங்கள் அமைப்பை சேர்ந்தவர் என்றும், பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கை இதுவென்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இந்த அறிக்கையானது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதனிடையே, தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் 15 வயது நபர் என்றும், தாக்குதல்தாரியுடன், சம்பவத்திற்கு முன்னர் இவர் பேசிக்கொண்டிருந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில்
கொல்லப்பட்ட மூவரில் 56 வயது பெண் ஒருவரும் 56 மற்றும் 67 வயது ஆண்கள் இருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல்தாரி கழுத்தை குறிவைத்தே தாக்குதல் ஈடுபட்டதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, காயங்களுடன் தப்பிய நால்வர் தற்போதும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தொடர்ச்சியான குழப்பங்களை அடுத்து, சாத்தியமான பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து ஜேர்மனி உஷார் நிலையில் இருந்துள்ளது என்றே கூறப்படுகிறது.
ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் 7 தாக்குதலை தொடர்ந்து சூழ்நிலை மோசமடைந்துள்ளது என்றும் உள்விவகார அமைச்சர் Nancy Faeser தெரிவித்துள்ளார்.