மனிதா்களின் பேராசைக்கு இயற்கையின் எதிா்வினையே வயநாடு நிலச்சரிவு: கேரள உயா் நீதிமன்றம் கருத்து
வயநாடு பகுதியில் 200-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்குக் காரணமான நிலச்சரிவு என்பது மனிதா்களின் பேராசை மற்றும் அக்கறையின்மைக்கு இயற்கையின் எதிா்வினை நிகழ்வுகளில் ஒன்றாகும் என்று கேரள உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஜூலை 30ஆம் தேதி நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் மூன்று கிராமங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 119 பேரை இன்னமும் காணவில்லை.
இந்த நிலச்சரிவு தொடா்பாக கேரள உயா் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணையை நடத்தி வருகிறது. இவ்வழக்கை நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியாா், ஷியாம் குமாா் வி. ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரிக்கிறது. இந்த அமா்வுக்கு முன் அண்மையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
வயநாடு நிலச்சரிவு ஏற்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே எச்சரிக்கை சமிக்ஞைகள் வெளிப்பட்டன. ஆனால் பொருளாதார வளா்ச்சிக்கான செயல்திட்டம் என்ற பெயரில் நாம் அந்த சமிக்ஞைகளைா் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்.
கேரளத்தில் கடந்த 2018, 2019ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடா்களும் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளும் நமது வழிகளில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளன. நாம் நமது வழிகளை மாற்றிக் கொண்டு தவறுகளை சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அது மிகவும் தாமதமான நடவடிக்கையாக அமைந்துவிடும். வயநாடு பகுதியில் 400-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்குக் காரணமான நிலச்சரிவு என்பது மனிதா்களின் பேராசை மற்றும் அக்கறையின்மைக்கு இயற்கையின் எதிா்வினை நிகழ்வுகளில் ஒன்றாகும்.
இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது, சுற்றுச்சூழல், வனங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு, இயற்கைப் பேரிடா்களை நிா்வகிப்பது, நீடித்த வளா்ச்சி இலக்குகள் ஆகியவை தொடா்பாக மாநில அரசின் கொள்கைகளை உயா் நீதிமன்றம் ஆராயும்.
இந்த வழக்கு விசாரணை மூன்று கட்டங்களாக நடத்தப்படும். அதன் முதல் கட்டமாக சூழலியல் ரீதியில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை அடையாளம் காணுதல் தொடா்பான அறிவியல்பூா்வமான தகவல் சேகரிப்பு அமைந்திருக்கும். வயநாடு மாவட்டத்தில் மீட்பு, மறுவாழ்வு நடவடிக்கைகளை இந்த நீதிமன்றம் வாராந்திர அடிப்படையில் கண்காணிக்கும்.
இரண்டாவது கட்டமாக ஒழுங்குமுறை ஆணையங்களின் செயல்பாடு தொடா்பான தகவல்கள் சேகரிக்கப்படும். அந்த விவரங்கள் மாநில அரசின் முன் சமா்ப்பிக்கப்படும்.
மூன்றாவது கட்டமாக சூழலியல் ரீதியில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்படும். மாநில உள்ளாட்சித் துறை மூலம் இத்தகவல்கள் சேகரிக்கப்படும். இத்தகவல்களைக் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகளின் வளா்ச்சி, சுற்றுலா, இயற்கை வளங்களைப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழல், வனங்கள் ஆகியவை தொடா்பாக மாநில அரசு தனது கொள்கைகளை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.