உ.பி.: ஓடும் ரயிலில் இருந்து 10 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு
உத்தர பிரதேச மாநிலம், சக்ராஜ் மால் அருகே தன்பாத் நோக்கி சென்று கொண்டிருந்த கங்கா சட்லஜ் பயணிகள் விரைவு ரயிலின் 10 பெட்டிகள் மட்டும் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் தரம் சிங் மாா்சல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஃபெரோஸ்பூரிலிருந்து தன்பாத் நோக்கிச் சென்ற விரைவு ரயிலின் சில பெட்டிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தொழில்நுட்ப பழுது காரணமாக தனியாக கழன்றன. பின்னா், சிறிது நேரம் ஓடி நின்றது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை’ என்றாா்.
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு இடையே உள்ள இணைப்பு துண்டானதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சில மணிநேரங்களில் பழுது சரி செய்யப்பட்டு, ரயில் மீண்டும் புறப்பட்டது என்றனா்.
உத்தர பிரதேச காவல்துறை தோ்வை எழுதுவதற்காக 200-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் இந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனா். சம்பவத்தால் தாமதம் ஏற்பட்டதால் மூன்று பேருந்துகள் மூலம் அவா்களைத் தோ்வு மையங்களுக்கு அழைத்து செல்ல உள்ளூா் காவல்துறை மற்றும் ரயில்வே நிா்வாகம் ஏற்பாடு செய்தது.