;
Athirady Tamil News

30 ஆம் திகதி யாழில் போராட்டம்

0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளனர்.

யுத்தம் நிறைவுக்கு வந்த நாட்கள் தொடக்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி போராடி வருகிறோம்.இது வரையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை.

உள்ளக விசாரணைகளின் ஊடாக நீதி கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை எனவே தான் நாம் சர்வதேச விசாரணைகளை கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்

அந்த வகையில் எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

எமது போராட்டத்திற்கு தமது அரசியல் நிலைப்பாடுகளை கடந்து கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும்.

அரசில் கட்சிகள் , சிவில் அமைப்புக்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் , சங்கங்கள் என அனைத்து தரப்பினரனும் எமது போராட்டத்திற்கு வலு சேர்க்க தமது ஆதரவுகளை வழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டு எமது குரலை சர்வதேசத்திற்கு கேட்குமாறு கூற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

அதேவேளை குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் , அகில இலங்கை தொழிலார் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியன் மற்றும் அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா ஆகியோரும் குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு போராட்டத்திற்கு தமது அமைப்புக்கள் சார்ந்த ஆதரவை தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.