பொதுவெளியில் பெண்கள் குரல் கேட்கக்கூடாது., ஆண்களுக்கும் உடை கட்டுப்பாடு விதித்த தாலிபான்
ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொடர்பான புதிய சட்டங்களை தாலிபான்கள் அமுல்படுத்தியுள்ளனர்.
பெண்கள் வீட்டுக்கு வெளியே பேசவும், கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொது இடங்களில் எப்போதும் தடிமனான துணியால் தங்கள் உடல் மற்றும் முகத்தை மறைக்க அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சட்டங்களின் பின்னணியில் உள்ள காரணத்தை தலிபான்கள் கூறியுள்ளனர்.
பெண்களின் குரல்களால் ஆண்களின் மனமும் திசைதிருப்பப்படலாம் என்று கூறியுள்ளனர். இதை தவிர்க்க பெண்கள் பொது இடங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
புதிய சட்டங்களுக்கு தாலிபான் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்டங்கள் ஹலால் மற்றும் ஹராம் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
தலிபான்களின் இந்த முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், பல மனித உரிமை அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே பெண்கள் வீட்டில் சத்தமாக பாடவும், படிக்கவும் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். புதிய சட்டங்களை மீறும் பெண்கள் அல்லது சிறுமிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் தாலிபான்கள் இந்த முறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முழங்கால் வரை தங்கள் உடலை மறைக்க வேண்டும்.
அதே நேரத்தில், உயிருடன் இருக்கும் எந்தவொரு நபரையும் புகைப்படம் எடுக்கவும் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் திரும்பி வந்த பிறகு பெண்கள் மீதான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன.
15 ஆகஸ்ட் 2021 அன்று, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தனர். அன்று முதல் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.