;
Athirady Tamil News

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் 150 பணியாளர்களின் நியமனத்தில் முறைகேடுகள்

0

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை நிர்வாகம் தேர்தல் விதிமுறைகளை மீறி காலி மாவட்டத்தில் 150 புதிய ஊழியர்களை இணைத்துக் கொண்டுள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

நூறு சுகாதார உதவியாளர்கள், ஐம்பது முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் ஐந்து சாரதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெற்றிடங்கள் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரும் பின்னரும் இருந்த நிலையில் வைத்தியசாலையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையை ஆட்சேர்ப்பு செய்வது சட்டத்திற்கு முரணானது என ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை கிளையின் செயலாளர் சந்தன ஜயலத் தெரிவித்துள்ளார்.

ஏற்பட்டுள்ள சிக்கல்கள்

அத்துடன், இந்த வைத்தியசாலையின் தலைவராக டொக்டர் சாரங்க அழகப்பெரும நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து நாளை (29ம் திகதி) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வைத்தியசாலை தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.

மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு வைத்தியர்களை நியமிக்கும் முறைமையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலை கிளையிடம் அறிக்கை கோரியுள்ளது.

இந்த வைத்தியசாலையானது முழுமையாக சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலையல்ல என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களுக்கு சிக்கல்

இது ஒரு அரை அரச வைத்தியசாலை என்பதால், அந்தந்த வைத்தியசாலைக்கு நேரடியாக வைத்தியர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம் சில வரம்புகளை விதித்துள்ளது. வைத்தியசாலைக்கு சிறப்பு வைத்தியர்களை நியமிக்க தனி முறை உள்ளது.

இவை அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் உள்ள வைத்தியர் ஒருவரின் பணியால் மற்ற வைத்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் சுகாதார அமைச்சு தலையிட வேண்டும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.