;
Athirady Tamil News

அனுரகுமாரவிற்கு எதிராக ஊழல் மோசடிக்குற்றச்சாட்டு

0

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவில் மக்கள் புரட்சி அமைப்பினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் என்ற ரீதியில் அனுரகுமார தாக்கல் செய்துள்ள சொத்து விபரங்களின் அடிப்படையில் அனுர அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சொத்து விபரங்கள்
நாடாளுமன்ற உறுப்பினராக அனுர நாடாளுமன்ற அதிகாரபூர்வ இல்லமொன்றை பெற்றுக்கொண்டுள்ள போதிலும் சொத்து விபரங்கள் வெளியிட்ட போது அதிகாரபூர்வ இல்லத்தைப் பெற்றுக்கொள்வதற்கான தகுதி அவருக்கு கிடையாது என்பது அம்பலமாகியுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாக சிவில் மக்கள் புரட்சி அமைப்பின் அழைப்பாளர் ரொசான் கரவனல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை குறித்த பூரண ஆவண விபரங்களை ரொசான், சமூக ஊடகமொன்றில் வெளியிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் , நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அதிகாரபூர்வ இல்லமொன்றை பெற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

நாடாளுமன்றிலிருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் தமக்கோ அல்லது தமது வாழ்க்கைத்துணையின் பெயருக்கோ சொத்துக்கள் இல்லாவிட்டால், வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்புக்களை வாடகைக்கு விடாதிருந்தால் அதிகாரபூர்வ இல்லத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆறு மாத கால சிறைத்தண்டனை
எனினும், அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட சொத்து விபரங்களில் தனது மனையியின் பெயரில் 2007ம் ஆண்டில் வீடு ஒன்று கொள்வனவு செய்யப்பட்டமை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வீட்டுக்கும் நாடாளுமன்றிற்கும் இடையில் 28.5 கிலோ மீற்றர் தூரமே காணப்படுவதாகவும், அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவிற்கு போலியான குற்றச்சாட்டு சுமத்தி முறைப்பாடு செய்தால் அவ்வாறானவர்களுக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பதை தெரிந்தே இந்த முறைப்பாட்டை செய்வதாக ரொசான் கரவனல்ல தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர் நீல நிறமா சிவப்பு நிறமா என்பது தமக்கு முக்கியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.