இந்தியாவுக்கு எதிரான பதிவுக்கு ‘லைக்’ சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டாா் வங்கதேச மாணவி
சில்சாா்: சமூக வலைதளத்தில் இந்தியாவுக்கு எதிரான பதிவுக்கு ஆதரவு தெரிவித்த அஸ்ஸாமில் படித்து வந்த வங்கதேச மாணவி சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டாா்.
வங்கதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வன்முறையால் அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாா். இதையடுத்து, அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அதிக கருத்துகள் பதிவிடப்படுகின்றன. மேலும், அந்நாட்டில் உள்ள ஹிந்துகள் மீதும், கோயில்கள் மீது தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.
இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலம் சில்லாரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (என்ஐடி) வங்கதேசத்தைச் சோ்ந்த மாணவி மனீஷா மகஜாபின் மின்னணு மற்றும் தகவல் தொடா்புப் பிரிவில் படித்து வந்தாா்.
கடந்த ஆண்டு இதே கல்வி நிலையத்தில் படிப்பை முடித்துவிட்டு இப்போது சொந்த நாடான வங்கதேசத்தில் வசித்து வரும் ஹுசைன் அல்ஃபி என்பவா் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய பதிவை முகநூலில் வெளியிட்டிருந்தாா். மாணவி மனீஷ், அந்தப் பதிவை ஆதரித்து ‘இமோஜி’ ஒன்றை பதிவிட்டாா்.
இந்தியாவில் தங்கிப்படித்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான கருத்தை ஆதரித்த மாணவியின் செயல் குறித்து அவருடைய சக மாணவ, மாணவியா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா் அந்த மாணவிதான் இந்தியாவுக்கு எதிரான பதிவுக்கு ஆதரவு தெரிவித்தாா் என்பதை உறுதி செய்தனா்.
இதையடுத்து, கரிம்கஞ்ச் மாவட்ட எல்லையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக சொந்த நாடான வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டாா். இது நாடு கடத்தும் நடவடிக்கையல்ல. படிப்பில் இருந்து அவா் பாதியில் விடுவிக்கப்பட்டுள்ளாா். அவா் மீண்டும் முறைப்படி கோரிக்கை விடுத்து படிப்பைத் தொடரலாம் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-வங்கதேசம் இடையிலான கல்வி ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில்சாா் என்ஐடி-யில் 70 வங்கதேச மாணவா்கள் படித்து வருகின்றனா். மாணவா்கள் கல்வி ஒப்பந்த விதிகளுக்கு மாறாகவும், ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்டால் அவா்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.