;
Athirady Tamil News

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட பணய கைதியை அதிரடியாக மீட்டுள்ள இஸ்ரேல்!

0

ஹமாஸ் (Hamas) ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதியை இஸ்ரேல் (Israel) பாதுகாப்புப்படை அதிரடியாக மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மீட்பு நடவடிக்கை நேற்றையதினம் (27) நடைபெற்றுள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேல் ஹமாஸ் போர்
குறித்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன் இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்றனர். இதனை தொடர்ந்து இன்றுவரை போர் தொடர்ந்து வருகின்றது.

எனினும் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 105 பேரை இஸ்ரேல் மீட்டதுடன் மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணய கைதிகள் 8 பேரையும் மீட்டுள்ளது.

ஆனால், 110க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

அதிரடி மீட்பு
இந்நிலையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதியை இஸ்ரேல் நேற்று(27) அதிரடியாக மீட்டுள்ளது.

தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு குடோனில் காவலாளியாக வேலை செய்து வந்த அரபு கிராமமான ரஹத்தை சேர்ந்த அல் கலடியை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பிடியில் இருந்த அல் கலடியை இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் நேற்று மீட்டுள்ளனர். காசா (Gaza) முனையில் உள்ள ரபா நகரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலத்தடி சுரங்கத்தில் இருந்து அல் கலடியை இஸ்ரேல் படையினர் மீட்டுள்ளனர்.

பணய கைதிகள்
மீட்கப்பட்ட அல் கலடி இஸ்ரேல் கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இஸ்ரேலியர்கள் வரவேற்றுள்ளனர். அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பிடியில் 110க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக உள்ளனர்.

அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்பதால் எஞ்சியவர்களை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது.

போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் பிடியில் இருந்து இராணுவ நடவடிக்கை மூலம் 10 மாதங்களுக்குப்பின் பணய கைதியை இஸ்ரேல் மீட்ட சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எனினும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.