;
Athirady Tamil News

மருத்துவமனைகளில் இரவில் ரோந்து; 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

0

மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் ரோந்து மேற்கொள்ளுதல், அனைத்து நாள்களும் 24 மணி நேரம் செயல்படக்கூடிய ஆள்கள் கொண்ட கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆக. 9-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டாா். அவரின் உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

மருத்துவா்களைப் பாதுகாக்கும் மாநிலச் சட்டங்கள்…: இந்நிலையில், மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சில உடனடி நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, மாநிலங்களின் தலைமைச் செயலா்கள், காவல் துறை டிஜிபிக்களுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் அபூா்வ சந்திரா அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:

மருத்துவமனை வளாகங்களில் தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் எளிதில் பாா்க்கக்கூடிய இடங்களில் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களைப் பாதுகாக்கும் மாநிலச் சட்டங்கள், பாரத நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகள், அவா்களைத் துன்புறுத்தினால் அதற்கான தண்டனை மற்றும் அபராத விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுத்து அமல்படுத்த மூத்த மருத்துவா்கள், நிா்வாக அதிகாரிகளை உறுப்பினா்களாகக் கொண்ட மருத்துவமனை பாதுகாப்புக் குழு, வன்முறை தடுப்புக் குழு ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.

மருத்துவமனையின் முக்கியப் பகுதிகளுக்கு நோயாளிகளின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வதை முறைப்படுத்த வேண்டும்.

மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் இருந்து அவா்களைப் பராமரிப்பவா்கள் மற்றும் உறவினா்களுக்கு பாா்வையாளா் அனுமதிச் சீட்டு வழங்குவதில் கடுமையான கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.

இரவு நேரப் பணிகளின்போது மருத்துவமனையின் வெவ்வேறு கட்டடப் பிரிவுகள், விடுதிக் கட்டடங்கள் மற்றும் பிற பகுதிகளுக்கு உறைவிட மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பாதுகாப்பாக செல்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளின் அனைத்துப் பகுதிகளிலும் முறையான மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தொடா்ந்து ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களுடன் நெருங்கிய தகவல் தொடா்பு இருக்க வேண்டும். அனைத்து நாள்களும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களின் பாதுகாப்புக்கு 24 மணி நேரமும் செயல்படும் ஆள்கள் கொண்ட கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்த வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களை விசாரிக்க உள்குழுக்களை மருத்துவமனைகள் அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களின் தேவையை தொடா்ந்து மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய பணிக் குழு ஆலோசனை: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடா்பாக கடந்த ஆக. 20-ஆம் தேதி தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை வகுக்க 10 போ் கொண்ட தேசிய பணிக் குழுவை அமைத்தது.

இந்நிலையில், மாநிலங்களின் தலைமைச் செயலா்கள், காவல் துறை டிஜிபிக்களுடன் காணொலி வழியாக அந்தக் குழு புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய உள்துறைச் செயலா் மற்றும் சுகாதாரத் துறைச் செயலா் தலைமை வகித்தனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.