மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் : நால்வர் குற்றவாளிகளாக அடையாளம்
கடந்த 2012 ஆம் ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக இன்றைய தினம் (29) மன்னார் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது 52 சந்தேக நபர்களில் 4 சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஏனைய 48 சந்தேக நபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேல் நீதிமன்றத்தில் விசாரணை
குறித்த வழக்கின் வழக்கு தொடுநர் தரப்பிலான சாட்சியங்கள் யாவும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்து ஒரு மாத காலத்திற்குள் எதிர்த்தரப்பு சாட்சியங்களுக்காக ஏற்கனவே தவணை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றையதினம் மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த 52 சந்தேக நபர்களில் 4 சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏனைய 48 சந்தேக நபர்களும் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த 4 நந்தேக நபர்களுக்குமான தீர்ப்பு வழங்க மன்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த 4 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை (04.09.2024) விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 2012ஆம் ஆண்டு மன்னார் நகரத்தை ஒட்டிய கோந்தைப்பிட்டி கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கடற்றொழில் துறை பகுதியிலிருந்து போரின் போது இடம்பெயர்ந்து புத்தளம் பகுதிக்குச் சென்றிருந்த முஸ்லிம் கடற்றொழிலாளர்கள் திரும்பி வந்தபோது கோந்தைப்பிட்டி கடற்றொழில் துறையைத் தம்மிடம் முழுமையாக மீள தருமாறு கேட்டிருந்தனர்.
பொலிஸார் பாதுகாப்பு
இதையடுத்து தமிழ் கடற்றொழிலாளர்களுக்கென மன்னாரின் இரண்டாம் கட்டைப் பகுதியில் வேறு இடம் நீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்திற்கு இன்னொரு முஸ்லிம் கடற்றொழிலாளர் ஒருவர் உரிமை கோரி தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் செய்ய தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வழக்கு முடியும் வரையில் தமிழ் கடற்தொழிலாளர்களை கோந்தைப்பிட்டியிலேயே தொழில் செய்ய அனுமதிக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து தமிழ் கடற்றொழிலாளர்களுக்கென மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை அவர்களுக்குக் பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் 2013 ஜூலை 16 ஆம் திகதியன்று உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை முஸ்லிம் கடற்றொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளாமல் தமிழ் கடற்றொழிலாளர்கள் உடனடியாகவே அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் ௭னக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
52 பேர் கைது
இதன் போது நீதிமன்றம் மீதான தாக்குதலின் போது அதிகாரிகள், பொலிஸார், பொதுமக்கள் எனப் பலரும் காயமடைந்தனர்.
மேலும் மன்னார் மேல் நீதிமன்றத்தின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பின்னர் குறித்த சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக 52 பேர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரனைகள் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் 12 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கின் விசாரணைகள் நிறைவுற்று இன்றைய தினம் தீர்ப்பு வழங்க ஒத்தி வைக்கப்பட்டது.