காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி யாழ். பல்கலையில் ஆர்ப்பாட்டம்: விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
இலங்கையின் அரச படைகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்துலக வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் நாளினை முன்னிட்டுயாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணியளவில் நாளை (30.08.2024) குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கூட்டு ஒருமைப்பாடு
இத்தனை ஆண்டுகளாகியும் தொடர்ந்து அலைக்களிக்கப்படும் எங்கள் தாய்மாருக்கும், உறவுகளுக்கும் உரிய நீதி எதனையும் வழங்கிடாது தொடர்ந்து காலதாமதங்களாலும், அலைக்களிப்புக்களினாலும் முன்னெடுக்கப்படுகிறது.
இதனை வஞ்சித்து எங்கள் கூட்டு மனவலுவினை வீழ்த்தி எம்மை உதிரிகளாக்க முயலும் பன்னாட்டு சமூகங்களிற்கும் சிங்கள – பௌத்த பேரினவாத ஒடுக்குமுறை இலங்கை அரச கட்டமைப்பிற்கும் எங்களின் கூட்டு ஒருமைப்பாட்டினை உணர்த்த இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எத்தனை ஆண்டுகளாலும் எங்கள் தலைமுறைகளின் குரல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும் என்பன உணர்த்துவதற்கும் நாளை ஒன்று திரள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகமாக உணர்வுரிமையோடு அழைத்து நிற்கின்றோம்” என்றுள்ளது.