பயணிகள் அதிகம் செல்லாத நாடு… துப்பாக்கி முனையில் 7 மணி நேரம்: பிரித்தானியரின் பகீர் அனுபவம்
பிரித்தானியாவின் சாகச பயணி ஒருவர், சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லாத ஒரு நாட்டில் தமக்கு ஏற்பட்ட மிக மோசமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
துப்பாக்கி முனையில்
பிரித்தானியரான 26 வயது டேனியல் பின்டோ உலகின் ஆபத்தான பகுதிகளுக்கு சர்வசாதாரணமாக சென்று திரும்பியுள்ளார்.
ஆனால் ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அவர் எதிர்கொண்ட மிக மோசமான சம்பவத்தையும், ராணுவ சோதனைச்சாவடியில் சுமார் 7 மணி நேரம் துப்பாக்கி முனையில் செலவிட்டதையும் அவர் முதல் முறையாக தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த மே 29ம் திகதி லிபியாவுக்கு புறப்பட்டு சென்ற டேனியல், சுமார் 21 நாட்கள் அந்த நாடு முழுவதும் பயணப்பட்டுள்ளார். பெரும்பாலும் சுற்றுலாப்பயணிகள் எவரும் செல்லாத நாடு அது என்பதாலும், அங்குள்ள மர்மமான பிரதேசங்களுக்கு செல்ல வேண்டும் என்பதாலும் டேனியல் இந்த சாகச முடிவை எடுத்துள்ளார்.
லிபியாவின் Tripoli, Leptis Magna, Ghadames மற்றும் நஃபுசா மலைப்பகுதிகளுக்கும் டேனியல் தனியாக பயணப்பட்டுள்ளார். நாள் ஒன்றுக்கு 10 டொலர்கள் மட்டுமே செலவிட்டு, உள்ளூர் மக்களுடன் மக்களாக இணைந்து 21 நாட்கள் அந்த நாட்டில் பயணப்பட்டுள்ளார்.
தெற்கு லண்டனை சேர்ந்த தொழில் ரீதியான பயணியான டேனியலுக்கு லிபியா பயணம் ஒன்றும் திட்டமிட்டப்படி நடந்துவிடவில்லை. பொதுவாக உள்ளூர் மக்களுடன் இலவச பயணம் மேற்கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ள டேனியலுக்கு, லிபியாவில் மிக மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.
E-visa முறை அறிமுகம்
சுற்றுலாப்பயணிகளுக்கு அறிமுகப்படாத நாடு லிபியா என்பதால், ஒரு ராணுவ சோதனைச்சாவடியில் 7 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டதாக டேனியல் குறிப்பிட்டுள்ளார்.
கை விலங்கிட்டு, துப்பாக்கி முனையில் 7 மணி நேரம் என்பது உண்மையில் திகிலை ஏற்படுத்திய சம்பவம் என குறிப்பிட்டுள்ளார் டேனியல். புதிதாக E-visa முறையை அறிமுகம் செய்ததை அடுத்து டேனியல் லிபியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரகம் லிபியா பயணம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவே டேனியல் முடிவு செய்துள்ளார். 63 டொலர் செலவிட்டு E-visa ஒன்றை ஏற்பாடு செய்த டேனியல், துனிசியாவில் இருந்து 2 நாட்கள் செலவிட்டு, உள்ளூர் மக்களின் உதவியுடன் லிபியாவின் Wazin பகுதிக்கு சென்று சேர்ந்துள்ளார்.
அங்கிருந்து 7 மணி நேரம் பயணப்பட்டு, 5 சோதனைச்சாவடிகள் கடந்து Tripoli சென்றுள்ளார். உள்ளூர் மக்களின் வாகனங்களில் இலவச பயணம் மேற்கொண்டு Tripoli சென்றதாகவே டேனியல் குறிப்பிட்டுள்ளார்.