புதிய நாடாளுமன்றத்தில் ஒரு வருடத்துக்குள் அரசமைப்பு: ரணில் உறுதி
“ஜனாதிபதித் தேர்தலையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஒரு வருட காலத்துக்குள் புதிய அரசமைப்பைத் தயாரிக்கும் பொறுப்பை நான் நாடாளுமன்றத்துக்கு வழங்குவேன் என எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தொனிப்பொருளில் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டுள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை
அதில் ‘இலங்கையை வெற்றியடையச் செய்வோம்’ என்ற உப தலைப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாது,
“நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதா? இல்லையா? என்ற தீர்மானம் புதிய நாடாளுமன்றத்தால் எடுக்கப்படும். புதிய தேர்தல் முறையை அறிமுகம் செய்யும் பணியும் புதிய நாடாளுமன்றத்தால் முன்னெடுக்கப்படும்.
சட்டவாக்கப் பேரவையின் அறிக்கைக்கு அமைய மாகாண சபை பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இரண்டாவது மந்திரி சபை நிறுவப்படும்.
மாகாண சபைகளுக்கு அரசமைப்பு மற்றும் சட்டங்களால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதை மேற்பார்வை செய்யும் அதிகாரம் இந்த மந்திரி சபைக்கு வழங்கப்படும்.” – என்றுள்ளது.