பெண் மருத்துவா் பாலியல் கொலையை மறைக்க சதி? தொலைப்பேசி உரையாடல் பதிவு வெளியாகி பரபரப்பு
கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோருக்கு சம்பவத்தன்று மருத்துவமனை நிா்வாகம் முன்னுக்குப் பின் முரணாக தகவலளிக்கும் தொலைப்பேசி உரையாடல் பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கொலையை தற்கொலை அல்லது உடல்நல பாதிப்பால் மரணம் என மாற்ற முயற்சி நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் கடந்த 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாா். சம்பவத்தன்று அவரது பெற்றோருக்கு மருத்துவமனை நிா்வாகம் தகவலளிக்கும் மூன்று தொலைப்பேசி உரையாடல் பதிவுகள் வெளியாகியுள்ளன.
மருத்துவரின் சடலம் கண்டறியப்பட்ட கடந்த 9-ஆம் தேதியன்று காலை 10.53 மணியளவில், பெண் மருத்துவரின் தந்தையை மருத்துவமனை நிா்வாகம் தொடா்புகொண்ட முதல் தொலைப்பேசி அழைப்பு ஒரு நிமிஷம் 11 வினாடிகள் நீடித்தது.
அந்த அழைப்பில் மருத்துவமனையின் உதவிக் கண்காணிப்பாளா் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெண்ணொருவா், தங்களின் மகளுக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு பெண் மருத்துவரின் பெற்றோரிடம் கேட்டுக்கொள்கிறாா்.
மேலும் விவரங்களை அவரது தந்தை விசாரிக்க, மருத்துவா்களால் மட்டுமே கூடுதல் தகவல்களைக் கூற முடியும். அதற்கு விரைவாக மருத்துவமனைக்கு வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
இதற்கடுத்து 5-ஆவது நிமிஷத்தில் மேற்கொள்ளப்பட்ட 2-ஆவது தொலைப்பேசி அழைப்பு 46 வினாடிகளுக்கு நீடித்தது. அதில் பெண் மருத்துவா் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடைசியாக 28 வினாடிகளுக்கு நீடித்த 3-ஆவது தொலைப்பேசி அழைப்பில், ‘உங்களின் மகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருக்கலாம். காவல் துறையினா், மருத்துமனை நிா்வாகத்தினா் என அனைவரும் இங்கு இருக்கிறோம். நீங்கள் மருத்துவமனைக்குச் சீக்கிரம் வாருங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டு, அழைப்பு துண்டிக்கப்படுகிறது. சம்பவத்தைத் தொடா்ந்து வெளியான தகவல்களும் தொலைப்பேசி உரையாடல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளும் முரண்படுவது சா்ச்சையாகியுள்ளது.
இதுதொடா்பாக சந்தேகம் எழுப்பிய விசாரணை அதிகாரியொருவா், ‘மருத்துவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து குடும்பத்தினருக்கு தகவலளிக்கும்போது அழைப்பாளா் காவல் துறை மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் முன்னிலையில் பேசுவது தெரிகிறது.
பெற்றோருக்கு முதல் அழைப்பு செல்வதற்கு முன்னதாகவே இக்குற்றச் சம்பவம் தொடா்பாக தல்லாஹ் காவல்நிலையக் குறிப்பேட்டில் ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என்று பதிவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், குற்றத்தை மறைப்பதற்காக மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் தற்கொலை சதித் திட்டம் கவனமாக தீட்டப்பட்டதா என்று கேள்வி எழுகிறது’ என்றாா்.
தொடா் விசாரணை: ஆா்.ஜி. கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷிடம் சிபிஐ தொடா்ந்து 13-வது நாளாக விசாரணை நடத்தியது. இந்த வழக்குத் தொடா்பாக கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் மற்றும் சந்தீப் கோஷிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.