;
Athirady Tamil News

சென்னையில் இரு செமி கண்டக்டர் ஆலைகள்: அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்!

0

சென்னையில் இரு செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாட்டில் செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.

சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். சென்னை சிறுசேரி சிப்காட்டில், 450 கோடி ரூபாய் முதலீட்டில், நோக்கியாவின் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், 10ஜி, 25ஜி, 50ஜி மற்றும் 100ஜி உள்ளிட்ட சேவை குறித்து ஆய்வு செய்யப்படும். இதன் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, சென்னையில் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில், பே பால் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மையம் அமைக்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சென்னை செம்மஞ்சேரியில் செமி கண்டக்டர் ஆராய்ச்சி மையம் அமைக்க மைக்ரோ சிப் நிறுவனம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் செய்துள்ளது.

250 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ள இந்த ஆலையின் மூலம் ஆயிரத்து 500 பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, சென்னை தரமணியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த செமிகண்டக்டர் உற்பத்தி மையம் அமைக்க அப்ளைட் மெடிரியல்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.