காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் போராட்டம்
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்றைய தினம் ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி – காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்தது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பேரணி இடம்பெற்றது.
பேரணியின் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தி சென்றதுடன் , பேரணியின் முடிவில் , அக்கினி சாட்சியாக தமக்கான நீதி கிடைக்கும் வரையில் போராட்டங்களை தொடர்வோம் என உறுதி எடுத்தனர்.
பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.