தலைகுனிந்து சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்.., சிலை இடிந்ததற்கு மோடி வேதனை
சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கோரியுள்ளார்.
மன்னிப்பு கேட்ட மோடி
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டில் திறந்து வைத்தார்.
இந்த சிலையின் உயரம் 35 அடியாகும். சிந்துதுர்க்கில் கனமழை பெய்தும், சூறாவளி காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில், மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி முழுமையாக உடைந்து கீழே விழுந்தது. இதில், தலை, கை, கால் என அனைத்து பாகங்களும் விழுந்து சிதறின.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பாஜகவின் ஆட்சியின் ஊழல் மிகப்பெரிய உச்சத்தில் உள்ளது. மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்தது. பாஜகவின் ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள் கூட தப்பவில்லை” என்று பதிவிட்டது.
இந்நிலையில், சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக தலை குனிந்து சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று மராட்டியத்தில் நடந்த அரசு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
மேலும், “இடிபாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்திய தாயின் மகனான சிவாஜியை அவமதிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல. காற்று, மழையால் சிலை சேதமடைந்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.