கடத்தியவரை விட்டு பிரியமுடியாமல் கதறிய குழந்தை – கைதுக்கு முன் உருக்கம்!
தன்னை கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை அழுத வீடியோ வைரலாகி வருகிறது.
குழந்தை கடத்தல்
உத்தர பிரதேசம், ஆக்ராவைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் தனுஜ் சாஹர். மாநில காவல்துறையின் சிறப்பு பிரிவு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
கடந்த 14 மாதங்களுக்கு முன் ஜெய்ப்பூரில் வசித்து வரும் தனது உறவினர் ஒருவரின் 11 மாத ஆண் குழந்தையை கடத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
பாசப்போராட்டம்
தொடர்ந்து, தனுஜ் சாஹரை வலைவீசி தேடி வந்தனர். யமுனை நதிக்கரையில் குடிசை அமைத்து, துறவி போல் வேடமிட்டு வாழ்ந்து வந்துள்ளார். கடத்திச் சென்ற குழந்தையை தனது மகன் என்று கூறி வளர்த்து வந்துள்ளார். இதற்கிடையில், சாஹர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
உடனே, குழந்தையை மீட்டனர். அதன்பின், குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது அந்த குழந்தை, தன்னை கடத்திச் சென்ற தனுஜ் சாஹரை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுதது.
அவரிடம் இருந்து குழந்தையை வலுக்கட்டாயமாக பிரித்து அதன் பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். கைதுக்கு முன் நடந்த இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது, தனுஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.