பிரித்தானியாவின் புலம்பெயர்தல் கொள்கை துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கிறது: குற்றச்சாட்டு
பிரித்தானியாவின் புலம்பெயர்தல் யுக்தி, புலம்பெயர்ந்தோர் துஷ்பிரயோகம் செய்யப்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என தொண்டு நிறுவனங்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளன.
துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கும் கொள்கை
புலம்பெயர்ந்தோர் தொடர்பில் ரெய்டுகள், காவலில் அடைத்தல் மற்றும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துதல் என்னும் பிரித்தானியாவின் புலம்பெயர்தல் கொள்கையால், அவர்கள் தலைமறைவாகும் நிலை ஏற்படலாம் என தொண்டு நிறுவனங்கள் கூறியுள்ளன.
அத்துடன், அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் அபாயமும் அதிகரிக்கிறது என தொண்டு நிறுவனங்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளன.
புலம்பெயர்ந்தோர் தொடர்பில் ரெய்டுகளும் கைது நடவடிக்கைகளும்
பிரித்தானியாவில், சுமார் 275 வீடுகளில் சட்ட விரோத புலம்பெயர்தல் தொடர்பில் ஒரு வார காலத்துக்கு ரெய்டுகள் நடத்தியதாக இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 27ஆம் திகதி உள்துறை அலுவலகம் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து, 85 சட்ட விரோதப் பணியாளர்கள் காவலில் அடைக்கப்பட்டார்கள். 200க்கும் அதிகமானோர் நாடுகடத்தப்பட்டார்கள்.
ஆக, இப்படி புலம்பெயர்தோரைக் குறிவைத்து எடுக்கும் நடவடிக்கைகளால் உருவாகும் அச்சத்தால், அவர்கள் தலைமறைவாகவும், பணி வழங்குவோர் மற்றும் ஆட்கடத்தல்காரர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படவும் வழிவகை ஏற்படலாம் என 80க்கும் அதிகமான தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.
அத்துடன், ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோரின் நிலையை முறைப்படுத்துவதற்கான வழிமுறையை எளிதாக்குமாறு அவர்கள் உள்துறைச் செயலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.