மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு என மொத்தமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நாடு
நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக இரண்டு நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க இருப்பதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து மாகாணங்களிலும்
எதிர்வரும் நவம்பர் மாதம் 20 மற்றும் 21ம் திகதிகளில் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரப்படும். இந்த இரு தினங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் என அறிக்கை ஒன்றில் பிரதமர் முகமது ஷியா தெரிவித்துள்ளார்.
பல தசாப்தகால மோதல்கள் மற்றும் வன்முறைகளால் சிதைக்கப்பட்ட ஈராக் மக்கள் தொகை கணக்கெடுப்பை பலமுறை ஒத்திவைத்துள்ளது. குறிப்பாக 2010ல், சர்ச்சைக்குரிய பிரதேசங்கள் தொடர்பாக சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பதட்டங்கள் காரணமாக கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
43 மில்லியன் மக்கள்
கடைசியாக 1997ல் 15 மாகாணங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மூன்று மாகாணங்கள் தவிர்க்கப்பட்டது. அதுவே குர்திஸ்தான் பிராந்தியமாக உருவானது. ஆங்காங்கே வன்முறை மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் இருந்தபோதிலும், சமீபத்திய ஆண்டுகளில் ஸ்திரத்தன்மையை ஈராக் மீட்டெடுத்துள்ளது.
தற்போதைய மதிப்பீட்டின்படி 43 மில்லியன் மக்கள் குடியிருந்து வருவதாகவே கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் 2007ல் வன்முறை சம்பவங்களை அடுத்து கணக்கெடுப்பு தடைபட்டது.